Wednesday, October 11, 2006

மானுடத் தத்துவம்

கலாச்சாரம் மாறுபட்டுக்கொண்டிருக்கிறது என்ற சிந்தனையில் இயல்பாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் மாற்றங்கள் அண்மை காலத்து மாற்றங்களாகதான் உள்ளன. எனினும் மாற்றங்கள் என்பது தொன்று தொட்டு தொடர்கிறது என்பதிலும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. கலாச்சார மாற்றம் என்றல்லாமல் கலாச்சார சீரழிவு என்ற பதத்தில் வரும் வாதங்கள் கலாச்சார மாற்றங்களினால் விளைந்த பாதிப்புக்களை எதிரொலிப்பதே என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேகணம் தமிழர்களாகிய நமது கலாச்சாரத்தின் வயதை கணித்துப் பார்ப்போமானால் தற்பொழுதைய கலாச்சாரம் தள்ளாடுவதிலும் நியாயம் இருக்கிறதோ என்ற நகைப்புத்தான் எழும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் பெயர் எப்படி தனித்துவம் வாய்ந்ததோ அதுபோலவே ஒரு சமூகத்திற்கும் அதன் கலாச்சாரமே அடையாளமாக நின்று தனித்துவம் பெற்று தரும் என்பதையும் என் சுயநல கருத்தாகவே இங்கு பதிக்க விரும்புகின்றேன். நம்மில் பெரும்பாலானோர் இனிவரும் மாற்றத்தை ஆமோதிக்கவில்லைதான் எனறாலும்கூட பழம்பெரும் மாற்றங்களை பாராட்டத் தவறவில்லை. மாற்றங்கள் ஊடுருவ ஊடகங்கள் உறுதுணையே ஆனாலும் ஊருக்குள் வந்துசேர இளந்தலைமுறைதான் ஊர்திகளாய் இருப்பவர்கள். ஒருவர் மகனாக இருந்தபோது ஏற்றுக்கொள்ளும் மாற்றங்களை தந்தையாக உயர்ந்தபோது மனம் ஏற்க மறுத்ததுதான் மானுடத்தின் தத்துவமே. இந்த தத்துவத்தின் விளக்கங்கள் என்றென்றும் ஏமாற்றும் என்பது பொய் எச்சரிக்கை.

No comments: